Wednesday, 2 July 2014

ரஷீத் அஹ்மது கங்கோஹியும் அவரது தரீகாவும்

                                                          
Fatwa Rasheediya

மௌலவி இல்யாஸ் காந்தலவி என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட தப்லீக் ஜமாஅத்தின் மூல குருமார்களில் இரண்டாமானவர்தான்; ரஷீத் அஹ்மது கங்கோஹி.

இவர் கங்கோஹ் கிராமத்தில் ஹிஜ்ரி 1244 துல்கஃதா பிறை 6 அன்று பிறந்தார். தந்தையார் பெயர் ஹிதாயத் அஹ்மது. தாயார் ஃபரீது பக்ஷியின் மகள் கரீமுன்னிஸா ஆவார். தமது 17 வது வயதில் டில்லி சென்று, 21 வது வயதில் அனைத்துக் கல்விகளையும் கற்று ஊர் திரும்பினார்கள். தம்முடைய மாமன் மகள் கதீஜா காத்தூன் அவர்களை மணந்தார்கள்.
 
தம்மை ஹாஜிசாகிப் என்ற இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சில்சிலாவில் தன்னை இணைத்துக் கொண்டார் கங்கோஹி சாகிப். மூன்று முறை ஹஜ் செய்திருக்கிறார்கள். தேவ்பந்த், ஸாரஹன்பூர் மத்ரஸாக்களின் முன்னேற்றங்களுக்கு பாடுபட்டிருக்கிறார்.
 
ஆரம்ப காலத்தில் இஸ்லாமியராக இருந்து, பின்பு ஆங்கிலேயரின் கைக் கூலியாக மாறி முஸ்லிம்கள் மத்தியில் பிளவு உண்டாக்க அரும்பாடுபட்டார். தேவையற்ற பத்வாக்கள், செயல் செய்ததின் மூலம் மக்களின் வெறுப்பையும், ஆலிம்களின் கண்டனங்களையும் பெற்று மக்கா, மதீனா உலமாக்களால் ஹுஸாமுல் ஹரமைன் என்ற பத்வாவினால் 'காபிர்' என்று பத்வா கொடுக்கப்பட்டவரானார். இறுதியில்,
ஹிஜ்ரி 1323 ஜமாத்துல் ஆகிர் பிறை 8 அல்லது 9 (கி.பி.1905 ஆகஸ்ட் 11 அல்லது 12) அன்று மரணம் அடைந்தார்.
 
பைஅத்தும் கிலாபத்தும்:
ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடங்கப்பெறும் விஷயத்தில் வந்திருக்கும் ஹதீது பற்றி முஹம்மது தானவி என்பவருடன் விவாதம் நடத்த சென்ற போது, ஹாஜி சாகிப் என்ற அஷ்ஷெய்குல் காமில் இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களிடம் பைஅத் ஆகும் விருப்பத்தை கங்கோஹி தெரிவிக்க, ஹாஜி சாகிப் அவர்கள் பைஅத் கொடுக்க மறுத்தார்கள். ஹஜ்ரத் ஹாபிழ் முஹம்மது ஜாமீன் அவர்களுடைய பரிந்துரையின் பேரிலும், அவர்களுடைய வற்புறுத்தலினாலும் தான் கங்கோஹி சாகிபுக்கு ஹாஜி சாகிப் அவர்கள் பைஅத் கொடுத்தார்களே தவிர விரும்பி பைஅத் கொடுக்க வில்லை.
 
அதேபோல் கிலாபத் கொடுத்ததைப் பற்றி ஹாஜி சாகிப் அவர்கள் கூறுவதாக மௌலானா ஜகரிய்யா சாகிப் ஒரு கடிதத்தில் கூறுகிறார்கள், ' எனது கலீபாக்கள் இரு வகைப்படுவர். முதலாவது வகையினர்: அவர்கள் வேண்டாமல் நானாக அவர்களுக்கு கிலாபத் கொடுத்திருக்கிறேன். அவர்களே அசல் கலீபாக்க்ளாவர். இரண்டாவது வகையினர்: அல்லாஹ்வுடை;ய பெயரைச் சொல்லிக் கொடுக்கட்டுமா? என்று வேண்டிக் கொண்டவர்கள். 'சரி சொல்லிக் கொடுங்கள்' என்று அவர்களுக்கும் உத்தரவு கொடுத்திருக்கிறேன். இந்த உத்தரவு முதலாவது தரமுடையது அல்ல'
 
[ நூல்  - தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 107.]
 
பைஅத்தும், கிலாபத்தும் ரஷீத் அஹ்மது கங்கோஹி எப்படி பெற்றார் என்பதை நீங்கள் இதன்மூலம் அறிந்திருப்பீர்கள்.
 
ஆங்கிலேய அரசின் கைக்கூலியாக கங்கோஹி:
ஹாஜி சாகிப் அவர்கள் கற்றறிந்த ஆலிம் அல்ல. மாறாக அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து ஞானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் கங்கோஹி ஓர் ஆலிமாக இருந்தார். ஹாஜி சாகிபின் ஞானத்தையும், தக்வாவையும், தவக்குலையும், கராமத்தையும் கண்கூடாக கண்டவராகத்தான் ஹாஜி சாகிபிடம் பைஅத் வாங்கினார்.
 
ஆனால், ஹாஜி சாகிபின் கட்டளைக்கும், உத்தரவிற்கும் கட்டுப்பட்டு நடந்து கொண்டிருக்கும் வரை ஹாஜி சாகிபை கராமத்து கொண்டவராகவும், அனைத்து கல்விகளையும் தெரிந்த ஞானம் பெற்றவராகவும் கங்கோஹி மதித்துக் கொண்டிருந்தார். எப்போது கங்கோஹி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் சென்று இஸ்லாத்தை கூறு போடத் துவங்கி விட்டாரோ அப்போதே தனது ஷெய்கைப் பற்றி அவர் கற்றறிந்த ஆலிம் இல்லை, ஷரீஅத் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதில்லை என்று கூறத் துவங்கி விட்டார். இதற்காக இவர் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்ற கூலிதான் காரணம்.
 
பாருங்கள்! 'மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹி கூறுகிறார்…. சிலரது தலைக்கு மேல் மரணம் துள்ளித் திரிந்து கொண்டிருந்தது. அமைதியும், நலனும் நிறைந்த கம்பெனி (ஆங்கிலேய ஆட்சி)யின் அந்நாட்களை அவர்கள் மதிக்கவில்லை. தங்களின் கருணையுள்ளம் கொண்ட கவர்மெண்டு (ஆங்கில அரசு)க்கு எதிராக அவர்கள் புரட்சிக் கொடி ஏற்றினார்கள்.'
 
 [ நூல்: தத்கிரத்துர் ரஷீத் பக்கம் 83.]
 
'உண்மையில் நான் சர்க்காருக்கு (ஆங்கிலேய அரசுக்கு) அடிபணிந்தவன். இந்தப் பொய்யர்களால் எனது முடியைக் கூட புடுங்க முடியாது. அப்படியே நான் ஒருக்கால் கொல்லப்பட்டாலும் சர்க்கார் எஜமானாயிருக்கிறது. அது விரும்பியதைச் செய்ய அதற்கு முழு அதிகாரமுண்டு.'
 
[நூல்: தத்கிரத்துர் ரஷீத் பக்கம் 80.]
 
ஆங்கிலேய அரசை தமது எஜமானாராகக் கொண்டு, அவர் சொல்லியபடி செயல்பட்டதன் விளைவுதான் தன்னுடைய குரு ஹாஜி சாகிப் மீது கொண்ட குரோதம்- வெறுப்பு, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை மீது கொண்ட விரோதம் அவரிடம் வெளிப்படுவதைப் பாருங்கள்!
 
சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமான கொள்கையில் கங்கோஹி:
1. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர்கள் 'வஹ்ஹாபிகள்' என்றழைக்கப்படுகின்றனர். அவரது கொள்கைகள் மிகவும் உயர்ந்தவை. அவருடைய மத்ஹபு ஹன்பலியாகும். அவரது குணத்தில் சற்று கடுமை இருந்தது. அவரைப் பின்பற்றுவோர் மிகவும் நல்லவர்கள்.
 
[பதாவா ரஷீதிய்யா பாகம் 1, பக்கம் 119.]
 
முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை ஜனங்கள் வஹ்ஹாபி என்றழைக்கின்றனர். அவர் மிகவும் நல்லவர். ஹன்பலி மத்ஹபை சேர்ந்தவரென்று கேள்விப்படுகின்றேன். மேலும் அவர் ஹதீஸின்படி முழுக்க முழுக்க நடப்பவராயிருந்தார். பித்அத் (அனாச்சாரம்) மற்றும் ஷிர்க் (இணைவைத்தல்)குகளைத் தடுத்தார்.
[பதாவா றஷீதிய்யா பாகம் 3 பக்கம் 79.]
 
2. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் 'கிதாபுத் தவ்ஹீது' என்ற நூலை மொழி பெயர்த்து 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் வெளியிட்ட மௌலவி இஸ்மாயில் திஹ்லவி அந்த நூலில், 'படைக்கப்பட்ட பொருட்கள் என்பதில் சூரியன், சந்திரன், நபி, வலி எல்லாமே சமம்தான் (பக்-31), நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் அற்ப அணுவை விடவும் குறைந்தவர்கள் (பக்-45), நபிகள் நாயகம் ஷபாஅத் செய்வார்கள் என்று யாராவாது நம்புவானானால் அவன் அசல் முஷ்ரிக்கும், மடையனும் ஆவான் (பக் 50), எவன் யாரஸூலல்லாஹ் என்று சொல்வானோ அவன் காபிர் (பக் 66, 67), ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாடுவதனால் ஒன்றும் உண்டாகப் போவதில்லை(பக்க.66) போன்ற பல கேடுகெட்ட கொள்கைகள் நிறைந்து கிடக்கின்றன.

இந்நூலைப் பற்றி ரஷீத் அஹ்மது கங்கோஹி, 'தக்வியத்துல் ஈமான்' என்னும் நூல் ரொம்ப விசேசமான உண்மையான நூலாகும். மேலும் ஈமானை சரிப்படுத்தக் கூடியதும் ஈமானுக்கு வலுவைக் கொடுக்கக் கூடியதுமாகும். அந்த நூல் ஷிர்க்கையும், பித்அத்தையும் மறுப்பதில் நிகரில்லாதது. அதனை வைத்திருப்பதும், படிப்பதும், அதன்படி அமல் செய்வதுமே இஸ்லாமாகும். மேலும் நற்கூலி கிடைக்க இதுவே காரணமாகும். அதை வைத்திருப்பது குப்ர் என்று எவன் சொல்வானோ அவன்தானே காபிர் அல்லது பித்அத்துக் கார பாஸிகாக இருக்கும்.
[பதாவா ரஷீதிய்யா பக்.41, 42.]

3. இதேபோல் அல்லாஹ்வால் பொய் சொல்ல முடியும் என்றும், காகம் கறி சாப்பிடுவது தவாபு என்றும் பத்வாக்களை தமது 'பதாவா ரஷீதிய்யா' நூலில் வெளியிட்டுள்ளார்.
 
[ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறைநேசர்கள்]
 
4. கேள்வி: மவுலிது ஷரீபு, கந்தூரி அதில் ஷரீஅத்திற்கு மாற்றமான எந்த வேலையும் இல்லை. எப்படியென்றால் ஹழரத்து ஷாஹ் அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நடத்தி வந்தது போல், (இவை) உங்களிடம் ஆகுமா ஆகாதா? எதார்த்தமாகவே ஷாஹ் வலியுல்லாஹ் ஸாஹிபு அவர்கள் மவுலிது ஷரீபு, கந்தூரி நடத்தி வந்தார்களா இல்லையா?

பதில்: மவுலிது ஷரீபு மஜ்லிஸில் மார்க்கத்திற்கு விரோதமான கருமங்கள் ஒன்றுமேயல்லாது போனாலும் சரி அதற்கு ஏற்பாடுகளும் அழைப்புக்களும் இருப்பதனால், இக்காலத்தில் ஆகாது. இதே போல்தான் கந்தூரியைப் பற்றிய விடையும் அநேக கருமங்கள் முன்னொரு காலம் ஆகுமானதாக இருந்தது. பின்னால் விலக்கலாகி விட்டது. கந்தூரியும், மவுலிது சபையும் அப்படியே'

[பதாவா ரஷீதிய்யா பக்கம் 105.]
 
5. 'ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ அவர்கள் மவ்லூத் ஓதுவது சரி என்று கூறி வந்தார்கள். அது சரிதான் என்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அதையொட்டியே சில காரணங்களைக் கருதி ஹஜ்ரத் தானவி அவர்களும் கான்பூரிலிருந்த ஆரம்ப காலத்தில் இதனை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். எனவே ஹஜ்ரத் கங்கோஹி அவர்கள் அதற்கு மறுமொழியாக எழுதுகின்றார்கள்:

'இரண்டாவது விஷயத்தில் தங்களுடைய அன்பு அபிமான மேலீட்டால் என்மீது வெறுப்பு ஏற்பட்டாலும் இந்த அடியானை முரண்பட்டவன் என்றோ மரியாதை குறைந்தவன் என்றோ நீங்கள் கருதிக் கொள்ளலாம். உண்மையைச் சொல்வதிலிருந்து என்னை இந்தக் குறைகள் எதுவும் தடுத்து விட முடியாது. அதாவது அடியேன் ஹஜ்ரத் ஷைகிடம் (ஹாஜி சாகிபிடம்) பைஅத் ஆனதும் எத்தனையோ விளக்கமுடைய முன்னோர்கள் பைஅத் ஆகிக் கொண்டிருப்பதும், அவர்கள் ஆலிம்களாக இருந்தும் ஆலிம் அல்லாதவர்களிடம் பைஅத் ஆவதும் ஏனென்றால் அவர்கள் தங்கள் உஸ்தாதிடம் கற்ற 'தீன் இல்மை' ஒரு ஷைகு ஆரிபிடம் அந்த இல்மை 'இல்முல் யகீன்' ஆக திடமான இல்மாக ஆக்கி கொள்ளவும் அந்த இல்மின்படி அமல் செய்வது நஃப்சுக்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு புரிந்து அறிந்து கொள்ளவுமே ஆகும். நாம் படித்திருப்பது சரியா இல்லையா என்பதை ஓர் ஆலிம் அல்லாத ஷைகிடம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகவோ, குர்ஆன் ஹதீதை அவருடைய சொல்லுக்கு ஏற்றதாக்கி, அவர் எதைத் தவறென்று சொல்கிறாரோ அதைத் தவறு என்று ஏற்றுக் கொள்ளவும் அவர் எதைச் சரி என்று சொல்கிறாரோ அதைச் சரி என்று சொல்லவும் யாரும் பைஅத் ஆவதும் இல்லை ஆனதும் இல்லை. இந்த எண்ணம் முழுக்க முழுக்கத் தவறாகும்.'
 
[தத்கிரத்துர் ரஷீத் ப:122]
[ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 168]
 
அறுந்து போன குரு-சிஷ்யன் தொடர்பு:
இது மட்டுமல்ல. ஹஜ்ரத் ஹாஜி சாகிபின் கிதாபான 'ஹஃப்த் மஸ்அலா' இவர்களின் கையில் கிடைத்த போது அதை எரித்து விட்டார்கள். மக்கள் இவர்களை எதிர்த்துக் கூச்சல் போட்டார்கள். இவர்களுக்கும் ஹாஜி சாஹிபுக்கும் இடையேயுள்ள 'நிஸ்பத் – தொடர்பு நீங்கி விட்டது' என்று பறை சாட்டினார்கள். எனினும் இவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை[ஆதாரம்: தேவ்பந்தின் 200 வருட இறை நேசர்கள் பக்கம் 168]
 
(குறிப்பு: ஹாஜி சாஹிப் அவர்கள் மக்காவிலிருந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கொண்ட ஹஃப்த் மஸ்அலா என்ற நூலை வெளியிட்டார்கள். இதை ஏற்றுக் கொள்ளாத ஆங்கிலேய அரசின் கைக் கூலியாக செயல்பட்டு சுன்னத் வல் ஜமாஅத்தை முழுமையாக பின்பற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மத்தியில் பிளவை உண்டாக்கும் விதமாக தன் ஷெய்கு எழுதிய அந்த நூலை எரித்ததோடு மட்டுமில்லாமல் ஷெய்கு பேரில் குப்ரு பத்வாவும் வெளியிட்டார் இந்த கங்கோஹி சாகிப் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)
 
இந்த சம்பவத்திற்குப் பின் ரஷீத் அஹ்மது கங்கோஹி தன்னை 'சிஷ்திய்யா ரஷீதிய்யா தரீகா' வின் ஷெய்காக பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கொண்ட ஷெய்கான ஹாஜி முஹாஜிர் மக்கி ரஹிமஹுல்லாஹு அவர்களை தன்னுடைய ஸில்ஸிலாவில் இணைத்துக் கொண்டு அதே ஸில்ஸலிலாவைக் கொண்டு தரீகாவை ஆரம்பித்து விட்டார்.
தன்னுடைய ஷெய்கை குப்ரு செய்தவராக சொல்லி அவர் எழுதிய புத்தகத்தை எரித்த பிறகு, இவருக்கும் ஷெய்குக்கும் உள்ள தொடர்பு எவ்வாறு நீடிக்கும்? அதேபோல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகவும் குறைவுபடுத்தியவர்களை நல்லவர், அவரைப் பின்பற்றத் தகும் என்று பத்வா வெளியிட்டும், அன்னாரை குறைவுபடுத்தியும், அல்லாஹ்வின் பரிசுத்த தாத்திற்கு குறைவு ஏற்படுத்தியும், இன்னும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமாக செயல்பட்ட இந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியை மக்கா, மதீனா உலமாக்கள் காபிர் என்று பத்வா வெளியிட்டனர். வேறு எப்படி இவரை அழைக்க முடியும்?
 
மேலும் இவர் தன்னுடைய சகாக்கள், முரீதுகளை(?) நடத்திய விதத்தைப் பாருங்கள்:
 
'நான் ஒரு முறை (மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி) கனவில் என்ன பார்க்கிறேன் என்றால், மௌல்வி காசிம் (தாருல் உலூம் தேவ்பந்த் மத்ரஸாவின் ஸ்தாபகர்) மணமகளுடைய தோற்றத்தில் இருக்கிறார். அவருடன் எனக்குத் திருமணமும் நடக்கின்றது. மேலும் எவ்வாறு ஒரு மனைவிக்கு அவளது கணவனிடமிருந்து ஒருவரைக் கொண்டு மற்றவருக்குப் பலன் கிடைக்குமோ, அவ்வாறே எனக்கு அவராலும், அவருக்கு என் மூலமும் பலன் கிடைக்கின்றது.
 
[தத்கிரத்துர் ரஷீத் பாகம் 2, பக்கம் 289.]
 
ஒருமுறை கங்கோஹி சாஹிபின் கான்காஹ் (மெய்ஞ்ஞானப் போதனைப் பள்ளி)வில் கூட்டமாயிருந்தது. அது போது ஹஜ்ரத் கங்கோஹி மற்றும் ஹஜ்ரத் நானூத்தவி ஸாஹிபின் மெய்ஞ்ஞான சீடர்கள் (முரீதீன்கள்) மற்றும் மாணவர்களனைவரும் அங்கு திரண்டிருந்தனர். மேற்படி இரு மௌலானாக்களும் கூட அங்கேயிருந்தனர்.
 
அப்போது ஹஜ்ரத் மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி காதல் ரசம் ததும்பும் குரலில் ஹஜ்ரத் மௌலானா காசிம் நானூத்தவியை நோக்கி இங்கே சிறிது (எனது பக்கத்தில் வந்து) படுத்துக் கொள்ளுங்களேன் என்று கூற, ஹஜ்ரத் காசிம் நானூத்தவி சிறிது நாணமுற்றாலும் கூட மறுபேச்சு ஏதும் பேசாமல் உடனே தயக்கத்துடன் மௌலானாவைப் பார்க்க…. மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி மீண்டும் வற்புறுத்தவே… உடனே சட்டென்று வந்து படுத்துக் கொண்டார். அடுத்து ஹஜ்ரத் அவர்களும் மௌலானா காஸிம் நானூத்தவிக்கு பக்கத்தில் வந்து அதே கட்டிலில் படுத்துக் கொண்டனர். இதன்பின் மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி காசிம் நானூத்தவியின் பக்கமாக திரும்பிப் படுத்து தமது கைகளை அவரது மார்பின் மீது எவ்வாறு ஒரு உண்மையான காதலன் தனது காதலியின் உள்ளத்தை அமைதியுறச் செய்வானோ அப்படி நெஞ்சில் வைத்துத் தடவ மௌலானா காசிம் நானூத்தவி மியான்? என்ன செய்கிறீர். இவர்கள் என்ன சொல்வார்கள் என்று கேட்க, ஹஜ்ரத் கங்கோஹி… சொல்வார்கள்தான்! சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று கூறினார்.
 
[அர்வாஹே ஸலாஸஹ் பக்கம் 289.]
 
என்ன கேணத்தனம் இது, ஈனத்தனம் இது. இதுதான் இந்தப் பெரியார்களின் (???) இறையச்சமா? இறைபக்தியா? இதுதான் இவர்களின் தரீகத்(?) வழியா?
இவ்வாறு இருக்கும் போது இவர் ஏற்படுத்திய தரீகாவை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சில்சிலா தொடர்பற்ற ஒரு தரீகா – நாயகத்தை குறைவு படுத்தியவர்களை ஷெய்காக கொண்ட தரீகா எப்படி இஸ்லாமிய நடைமுறை – ஸூபித்துவ நடைமுறையில் இருக்க முடியும்? ஆகவேதான் இந்த தரீகா –சிஷ்திய்யா ரஷீதிய்யா தரீகா தரீகாவே அல்ல. இது ஒரு வஹ்ஹாபியிஸ கோட்பாட்டின் ஒரு வடிவம்தான்.
 
இதனால்தான் இந்த தரீகா போர்வையில் செயல்படும் இந்த கூட்டத்தில் சேரக் கூடாது என்று 17-02-1995 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மஜ்லிஸ் உலமாயே அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் தீர்மானம் நிறைவேற்றி மக்களை எச்சரிக்கை செய்தது. ஆகவே இஸ்லாமியர்கள் இதை விட்டு விலகியே இருக்க வேண்டும்.
                                                                                               நன்றி-  http://sufimanzil.org/
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment