அகிலம் வாழ் மக்களின் இறைநம்பிக்கை உறுதியுடன் திகழ்ந்து உண்மையாளர்களாய் வாழ வேண்டும். உலக முழுதுமே ஏகத்துவப் பெருஞ்சுடர் ஏற்றி வைக்கப்பட வேண்டும் என வாழ் நாளெல்லாம் போராடிய பெருமானாரின் 'இறை நம்பிக்கையே ஆட்டம் கண்டு விடலாமல்லவா?' என எழுதிய பின்னர்,
'குப்புற வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.'
'இபுனு சாலிஹ்'
அகிலத்தின் அருட்கொடையாய் அவனியில் தோன்றிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றைய அனைத்து தூதுவர்களை விடவும் இறைவனிடத்தில் மிகப்பெரும் அந்தஸ்த்தை பெற்றிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வுடன் எவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மிஃராஜ் நிகழ்ச்சி ஒன்று மட்டுமே ஆதாரமாகப் போதும்.
அப்படி சிறப்பிற்குரிய நிகழ்ச்சியான மிஃராஜ் ஏன் ஏற்பட்டது? என்ற காரணத்தை விளக்குமுகத்தான் அருள்மறையான திருக்குர்ஆன் கூறுகிறது:-
'(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை சிறப்புற்ற கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான். அதன் சூழவுள்ள பூமிகளை நாம் ஆசீர்வதித்துள்ளோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் செவியுறுவோனும் உற்று நோக்குபவனுமாக இருக்கிறான்' (17:1)
இவ்வாறு அண்ணலாருக்கு மிஃராஜ் நிகழ்ச்சி ஏற்பட்டதற்கான காரணத்தை மிகத் தெளிவாக குர்ஆன் எடுத்துரைக்கிறது. தனது அற்புதப் படைப்புகளை, அந்தரங்கங்களை தனது அன்பிற்குகந்த நேசருக்கு எடுத்துக் காட்ட வேண்டும். தனது வல்லமையை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற ஆவலில் அவர்களை அழைத்துச் சென்றதாக எக்காலமும் மாறாத குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறிக் கொண்டிருக்கிறான்.
ஆனால்……
1972-ம் ஆண்டு அக்டோபர் மாத 'ஜமாஅத்துல் உலமா' இதழில் 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது?' என்ற தலைப்பில் மௌலவி யூசுப் அன்சாரி எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதியான,
'அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அபூதாலிப் இருவரும் நுபுவ்வத்து பதினோராவது ஆண்டு முடிவில் அவ்விருவரும் மறைந்தனர். அவர்களின் மரணம் நபி அவர்களுக்கு நீங்காத்துயரை நல்கியது. இரு கரங்களை இழந்தவராய், இரு இறக்கைகளை பறிகொடுத்த பறவையாய் மனமுடைந்தனர். எதிரிகளின் எதிர்ப்புகள் கொழுந்து விட்டு விண்ணாளவ எரிந்தது. அத்தீச்சுவாலைகள் அவர்களின் பொன்மேனியைக் கரிக்கத் தொடங்கியது. இப்படி துன்பங்கள் தொடர்ந்து அவர்களைத் தாக்கும்போது அவர்களது உள்ளத்து வலிவும் இறை நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? இது நபிமார்களுக்கு ஏற்பட்ட இயல்புதான்'
என்று அகிலத்தின் அனைத்து மாந்தர்கள் தம் ஈமானை வலுப்படுத்தி-சீராக்க வந்த பேரிறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஈமானே ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என தன்னிலை தவறி ஏதோ மயக்கத்தில் இருந்து கொண்டு வரைந்திருந்த கட்டுரைக்கு தமது மறுப்பையும், விளக்கத்தையும் 1976 ஜூலை ஜமாஅத்துல் உலமா இதழில் வெளியிட்டிருக்கிறார்.!
சுமார் மூன்றே முக்கால் ஆண்டுகாலமாக, தான் எழுதிய தவறை எந்த வகையில் பூசி மெழுகலாம் என்று நீண்ட பெரும் ஆராய்ச்சி நடத்தி கடைசியாக விளக்கம் தரப்போய் சறுகி விழுந்திருக்கிறார். குப்புற வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என வீராப்பு பேசுகிறார்.
இருகரங்களை இழந்தவராய் -இரு இறக்கைகளைப் பறிகொடுத்த பறவையாய் மனமுடைந்தனர் என எழுதி தனது அழுக்கு நிறைந்த உள்ளத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார். உறுதியற்ற உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் ஈமானே ஆட்டம் காணுமளவுக்குகோழை என்ற பெருமைக்குரிய நாயகத்தைச் சிறுமைத்தனமாக வர்ணிக்கிறார் வலுவற்ற உள்ளம் கொண்ட சாதாரண மனிதனுக்கு அவர்களை ஒப்பிடுகிறார். என்ன பேத்தல் இது!
பெருமானாரின் பொன்னார் காலணியை ஏன் ஒரு உரோமத்தைக் கூட இது என்ன சாதாரண காலணிதானே! முடிதானே! என்று கேவலமாக-சாதாரணமாக எண்ணியவன் காபிர் என நமது மார்க்கத் தீர்ப்புகள் கூறிக்கொண்டிருக்க சிறகொடிந்த பறவையாய் மனமுடைந்தனர் என்று எவ்வளவு துணிச்சலோடு எழுதுகிறார்?
அவரைக் கூறிக் கூட குற்றமில்லை. அவர் சார்ந்திருக்கும் கொள்கையின் தலைவரான இஸ்மாயீல் திஹ்லவீ 'நாயகம் அவர்களுக்கு பெரிய சகோதரரின் மரியாதை கொடுங்கள்' (தக்வியத்துல் ஈமான்) என எழுதியிருக்கிறார்.
குருவைப்போன்றுதானே சிஷ்யரும் இருப்பார். சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும். அதிலும் இக்காலத்திலுள்ள சீடர்களை; கூற வேண்டியதில்லை. குரு 8 அடி பாய்ந்தால் சீடர் 16 அடி பாய்கிறார். குரு ஹராம் என்பார், சீடர் ஹராம் என்ன ஷிர்க்கேதான் என்று வாய் கூசாது தன் மேதாவித்தனத்தை காட்டும் கோஷ்டிதானே!
இப்படி தான்தோன்றித்தனமாக எழுதிவிட்டு அதற்கொரு மறுப்புரை, விளக்கவுரை. போகட்டும் எழுதுகிற விளக்கவுரையையாவது விவஸ்தையோடு எழுதக் கூடாதா?
இறை நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்று எழுதியதில் 'இறை நம்பிக்கை என்பதற்கு 'ஈமான்' என்று அர்த்தம் கொடுப்பது தவறு என்றும், 'நம்பிக்கை' என்ற சொல்லுக்கு எண்ணம் அது விளைகின்ற மனம் என்றே நான் பொருள் கொண்டிருக்கிறேன். இறை என்ற சொல்லை உதவி என்ற சொல் தொக்கி நிற்கிறது' என்றும் தமது அதிபுத்திசாலித்தனத்தை விளம்பரப்படுத்துகிறார். அப்படியாயின், 'ஈமான்' என்பதற்கு தமிழில் என்ன பொருள்? ஆண்டு பலவாக அரபிக்கல்லூரி பலவற்றில் ஓதிக்கொடுத்திருக்கிறீர்களே அப்பொழுது ஈமானுக்கு என்ன பொருளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள்?
தமிழாய்வாளர்களே! புது அகராதி ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை என்றால் எண்ணம், மனம் என்று பொருள். இறையென்றால் இறை உதவி. அன்ஸரி சாகிப் எந்த அகராதியிலிருந்து இப் பொருள்களை கண்டெடுத்தாரோ யாம் அறியோம்.!
இத்தோடு விடவில்லை அவர் தம் விளக்கத்தை! மீண்டும் தொடர்கிறார்:-
'இறை என்ற சொல்லை உதவி என்ற சொல் தொக்கியிருக்கிறது. இப்படி தொக்கியிருப்பதற்கு அரபி மொழியில் தக்தீர் என்று சொல்கிறோம். இப்படி தக்தீர் இடுவது அரபு மொழியின் மரபுதான்.'
என்று இறையென்பதற்கு இறை உதவி என தான் கூறும் விளக்கம் சரிதான் என வாதாடுகிறார். அன்ஸாரி தமிழ் மொழியில் இறை நம்பிக்கை ஆட்டம் கண்டு விடலாமல்லவா? என எழுதிவிட்டு, அரபி மொழியில், 'தொக்கி நிற்பது மரபுதான்' என்று கூறினால் எப்படி பொருந்தும்? தமிழுக்கு தமிழின் இலக்கண மரபையல்லவா கூற வேண்டும்?
எந்த மொழியில் நாம் கட்டுரை எழுதினோம் என்றே தெரியாமல் ஆலிம் ஒருவர் தடுமாறி அதற்கு விளக்கம் என்ற வகையில் ஏதோ எழுதி வைக்க, அதை வேறொரு ஆலிம் தனது பத்திரிகையில் முன்யோசனையின்றி வெளியிடுவதா? இவர்கள்தான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை சீர்திருத்தும் செம்மல்கள். தீனை உயிர்ப்பிக்கும் உலமாப் பெருந்தகைகள் (?) பிறர்கள் அல்லாஹ்வைத் தொழவில்லையே என்று ஏங்கி 'தொழுவோம் வாருங்கள்!' என்று அழைக்கும் முத்தகீன்கள். அய்யோ சமுதாயமே! இதுதான் உன் தலைவிதியா?
முடிவாக, தான் முன்னர் எழுதிய இறை நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்பதற்கு….
'இறை – இறை உதவி
நம்பிக்கை – எண்ணம், மனம்
ஆட்டம் – கலங்குவது
இவற்றை முறைப்படுத்திப் பார்க்கும்போது, நபியவர்கள் இறை உதவி குறித்து மனம் கலங்கிடலாமல்லவா? என்றாகும்' என்று கூறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். அப்பாடா ஒருவகையாக விளக்கம் எழுதி முடித்துவிட்டோம் என்று.
தமிழ் மொழி வல்லுனர்களாலும், நுண்மாண் நுழைபுலமுடைய ஆன்றவிந்தடங்கும் சான்றோர்களாலும், தொகுக்கப்பட்ட நிகண்டுகளையும் அகராதிகளையும் நான் ஆராய்ந்தேன்! அதில் எங்குமே மேற்சொன்ன அர்த்தத்தைக் காண முடியவில்லை. இறை என்ற சொல்லுக்கு வினைச் சொல் என்ற அடிப்படையில் (நீர்) இறைத்தல் என்றும், பெயர்ச்சொல் அடிப்படையில் தலைவன், அரசன், இறைவன் என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த நிகண்டைப் பார்வையிட்டார்? என்று தெரிவித்து விளக்கினால் அவருக்கு நிச்சயமாக,'தமிழ்வேள்' பட்டம் கொடுக்க நாம் சிபாரிசு செய்யலாம்! அப்படியில்லையாயின் அவர் தமது அறிவீனத்தை ஒத்துக் கொண்டு, மன்னிப்புக் கேட்பதே முறையாகும்!
நம்பிக்கை என்பது காரியம்!
மனம் என்பது காரணம்!
மனம் என்பது காரணம்!
இந்த இரண்டையும் ஒன்றாக்கி தனது வாதத்திற்கு விளக்கெண்ணெய் போடுகிறார் அன்ஸாரி சாயிபு! இதற்கு ஒத்து ஊதுகிறார் அபுல் ஹசன் ஷாதலி சாயிபு! மனம் என்னும் மேடையில் உதயமானதுதான் நம்பிக்கை நட்சத்திரம். இப்படியிருக்கும்போது மனமும் நம்பிக்கையும் ஒன்றாகுமா?
வானம் வேறு! நிலவு வேறு! நிலவும் வானமும் ஒன்றேயென்று ஒருவன் சொன்னால் அவனை நாம் சந்தேகத்தோடு பார்ப்போம். சூரியன் வேறு! ஆகாயம் வேறு!
சூரியனும் ஆகாயமும் ஒன்றே என்று ஒருவன் சொன்னால் நாம் அப்படிக் கூறுபவனைப் பார்த்து அனுதாப்படுகிறோம்.
ஆனால்,அன்ஸாரி சாயிபு,குற்றாலத்தில் நீரருவி கொட்டு முன்பே, நான் அங்கு போகத் தயார்! என்ற பாவனையில் உளற ஆரம்பித்துவிட்டார்!
மேலும் தமது 72-ம் ஆண்டு கட்டுரையில் 'இது நபிமார்களுக்கு ஏற்பட்ட இயல்புதான்' என்றும் எழுதி உள்ளார். அதற்கு ஏன் விளக்கம் கொடுக்கவில்லை? என்ன வடிகட்டின பேத்தல் இது? முந்தைய நபிமார்களுக்கும் ஏற்பட்ட இயல்புதானாம். எந்த நபியின் இறை நம்பிக்கை ஆட்டம் கண்டது? எதற்காக ஆட்டம் கண்டது?
அந்தந்த காலங்களில் வாழ்ந்த நெறிகெட்ட மக்களை நேர்வழிப்படுத்தி, ஏகத்துவப் பெருஞ்சுடதை ஏற்றி வைக்கவென இறைவனால் இவ்வகிலத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கே இறை நம்பிக்கை ஆட்டம் காணுமென்றால், சாதாரண உம்மத்துகளின் நிலை என்னவாகும்? கட்டுரை எழுதியவர் , பிரசுரித்தவர்கள் நிலைகள் எல்லாம் என்னவாகும்?
எழுதுகோலையும், காகிதத்தையும் எடுத்து மனம் போனபடி எழுதிவிட்டால் போதாது. எழுதுகிற விவரங்களை அதுவும் நபிமார்கள் – ஷரீஅத் குறித்து எழுதும்போது உன்னிக் கவனித்தல் அவசியம். இது பட்டங்கள் பலபெற்ற – எழுத்தாளரான கட்டுரையாசிரியருக்குத் தெரியாததல்லவே!
இப்படி வெளிக்கு நல்லவர்கள் போல் வேஷமிட்டு கொண்டு உள்ளத்தில் தீய்ந்த கொள்கைகளைக் கொண்டலைபவர்களைப் பற்றி அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
'அல்ஸின துஹும் அஹ்லா மினஸ் ஸுக்ர் வகுலூபுஹும் குலூபுத் தி ஆப்'
'அவர்களின் நாவுகள் சர்க்கரையை விட அதிக இனிப்புடையது. ஆனால் அவர்களின் இதயங்கள் ஓநாய்களின் இதயங்களாயுள்ளன' எனக் கூறுகிறார்கள்.
அடுத்து 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது' என்பதற்கான காரணத்தைத் தமது விளக்கவுரையில் அன்ஸாரி சாகிப் கூறுகின்றார்.
'பெருகிவரும் துன்பங்கள் கடல் அலைகள் போல் அடுக்கடுக்காய் ஓயாது, ஒழியாது அண்ணலவர்களைத் தாக்கும்போது நபியவர்களின் உள்ளத்து வலிவும், இறையுதவி இப்போது வருமோ, கொஞ்சம் தாமதித்து வருமோ என்பது குறித்து அவர்கள் உள்ளம் கலங்கிவிடலாமல்லவா? அப்படி அவர்களுடைய மனம் கலங்கிவிடாமல் காப்பது அல்லாஹ்வின் பொறுப்பு. இப்பொறுப்பை இறைவன் மிஃராஜ் என்ற உருவில் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வைத்தான்.மிஃராஜின் காரணத்தை இவர் இப்படிக் கூறுகிறார்.
ஆனால்….
அல்லாஹ் தனது திருமறையில், தனது அத்தாட்சிகளை அவர்களுக்கு காட்டும் பொருட்டு அழைத்துச் சென்றதாக – மிஃராஜ் ஏற்பட்டதாகக் கூறுகிறான்.
அன்ஸாரி சாகிபின் தடுமாற்றம் – முரணாணன போக்கு இப்போது மிகத் தெளிவாகி விட்டதல்லவா?
1972-அக்டோபரில் 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது?' என்ற கட்டுரையை எழுதியபோது அது குறித்த ஆட்சேபணை கிளப்பப்பட்டது. அதற்கு வெகுவிரைவில் விளக்கவுரை வர இருக்கிறது என்று 1974 செப்டம்பர் ஜமாஅத்துல் உலமாவில் விளம்பரம் வந்தது. இப்பொழுது 1976 ஜூலை விளக்கவுரை என்று குழப்பவுரை வெளிவந்துள்ளது. ஆக விளக்கவுரைகளும், விளம்பர உரைகளும் வருவதற்கே ஆண்டுகள் சில தேவைப்படுகிறது!
இப்படியெல்லாம் ஏன் அண்ணல் பெருமானாரைப் பற்றி தரக் குறைவாக விமர்சிக்க வேண்டும்? ஆதவனைக் கண்டு நாய்கள் குரைப்பதால் அப்பகலவனுக்கு எனன பங்கம் வந்துவிடப் போகிறது? பெருமானாரை தரங்குறைத்து மதிப்பிடுபவன் தன் அந்தஸ்த்து பறிபோய் தரம் தாழ்வர்! இது அன்று முதல், இன்றுவரை நாம் கண்டு வருபவைகளாகும்.
'அல்லாஹ்வின் ரசூலை வருத்தப்படுத்துபவர்களுக்குக் கொடிய வேதனை உண்டு' என குர்ஆன் கூறுகிறதே!
அவரவர்கள் எந்தெந்தக் கொள்கைகளை சார்ந்திருக்கிறார்களோ யார்யாரை குருவாக ஏற்றுக் கொண்டாடுகிறார்களோ அவர்களது கொள்கைகள்தானே பக்தாசிகாமணிகளுக்கும் இருக்கும். உள்ளத்தில் நிறைந்திருக்கும் தவறான கொள்கைகள் தாம் எழுத்து வடிவத்திலும், பேச்சு உருவிலும் வெளிவரும்.
'ஜமாஅத்துல் உலமா' என்று பத்திரிகைக்கு பெயர் வைத்திருப்பதைக் கண்டு உலமாக்கள் சபையினரால் – அவர்களது எல்லோரது ஏகோபித்த ஒப்புதலையும் பெற்று நடைபெறுவதாக யாரும் எண்ண வேண்டாம். இல்லையில்லை உலமாக்களின் அங்கீகாரத்தோடுதான் உலமாக்கள் சபையின் ஒப்புதலோடுதான் உலமாக்கள் சபையின் பெயரை இப்பத்திரிகைக்கு சூட்டியிருக்கிறேன். ஜமாஅத்துல் உலமா என்று நாமம் இட்டிருக்கிறேன் என்று அதன் ஆசிரியர் கூற முன்வருவாரா?
எனவே ஆலிம்களின் ஒப்புதலோடுதான் இப்பத்திரிகை நடக்கிறது என்று யாராவது நம்பியிருந்தால் அவ்வெண்ணத்தை தூர விலக்கி வைத்து விடுங்கள்! ஆகவே ஆசிரியரே! ஜமாஅத்துல் உலமாவின் பெயரை வைத்துக் கொண்டு ஷரீஅத்திற்கு மாறுபட்ட கருத்துக்களை எழுதாதீர்கள். அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
நன்றி: ஹுஜ்ஜத் மாத இதழ் ஆகஸ்ட் 1976.
முற்றும்.
நடந்த சம்பவம்:- நாயகத்தை குறைவுபடுத்தியவர் அடைந்த கதி:
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஈமான் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்று தரக்குறைவாக எழுதிய ஏ.ரு.யு.யூசுப் அன்ஸாரி என்பவர் இறந்தவுடன் சென்னையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றியும் கடும் துர்வாடை வீசிக் கொண்டிருந்தது. அங்கு வருபவர்களெல்லாம் உடனே இதை எடுத்துவிடுங்கள் என்று முகம் சுளித்து , மூக்கு பொத்திக் கொண்டு சென்றனர். மேலும் அந்த இறந்த உடலிலிருந்து இரத்தம் வந்து கொண்டேயிருந்தது. இதைப் பார்த்தவர்கள் அவரின் பரிதாப நிலையை எண்ணி வருந்தினர்.
நன்றி - http://sufimanzil.org/
No comments :
Post a Comment