Tuesday 1 May 2018

நிலைகுலையும் தேவ்பந்தின் அஸ்திவாரம்

நாம் இங்கு காணவிருப்பது தேவ்பந்தின் ஸ்தாபகர்  மவ்லவி காஸிம் நாணோத்வியின் வரலாற்றைக் கூறும்  'ஸவானெஹ் காஸிமி' என்னும்   நூலில் உள்ள ஓர் சம்பவத்தை . இந்த நூலை எழுதியவர் தேவ்பந்தி வஹாபி பிர்காவின் ஆகப் பெரிய அறிஞர் மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி .

தமது ஸ்தாபகருக்கு செய்யும் மரியாதையாக   தாருல் உலூம் தேவ்பந்தின் மூலமே இந்த நூல் வெளியிடப்பட்டது .தேவ்பந்தின் முதல்வரும் ,காஸிம் நாணோத்வியின் பேரருமான  காரி தைய்யப் தமது பெயர் , இந்த நூலில் பதிப்பகத்தார் என்று வருவதை தமது பெரும் பேறாக கருதினார் .

ஸவானெஹ் காஸிமி


     மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி,மற்றோரு தேவபந்த் அறிஞர் மவ்லானா   மஹ்மூதுல் ஹசன் அவர்களின்   மூலமாக ஒரு நிகழ்வை விவரிக்கிறார் ,

" மவ்லானா   மஹ்மூதுல் ஹசன் தேவ்பந்தில் ஓதி கல்வி பயின்று பஞ்சாப் மாகாணம் நோக்கி பயணித்த ஒரு இளம் மவ்லானாவைப் பற்றி சொல்கிறார்

அந்த சிறிய ஊரின் மக்கள் தங்கள் மஸ்ஜிதின் இமாமாக இளம் மவ்லானாவை நியமித்தனர் . அவ்வூர் வாசிகள் வெகு விரைவில் இளம் மவ்லனாவிடம் நன்கு பழகினர் . சில மாதங்கள் கழித்து அவ்வூருக்கு  மற்றோரு மவ்லானா  வந்து ,மார்க்க கல்வி விளக்கம் கொடுத்து ,பயான்கள் செய்ய ஆரம்பித்தார் . அவ்வூர் மக்கள் சிலர் புதிய மவ்லானாவின் பயான்களால் ஈர்க்கப்பட்டனர் . புதிய மவ்லானா அவ்வூர் பள்ளியின் இமாம் பற்றி விசாரிக்க ,அவரிடம் தேவ்பந்த்தில் இருந்து வந்த    இளம் மவ்லானா பற்றி சொல்லப்பட்டது .

தேவ்பந்த் மதரஸா பேரைக் கேட்டதுமே ,புதிதாக வந்த மவ்லானா மிகவும் கோபம் அடைந்தவராக ,இவ்வளவு காலம் தேவ்பந்தி  இமாமின் பின் நின்று தொழுத தொழுகை செல்லாது என்று பத்வா வழங்கினார் .

அவ்வூர்வாசிகள் தாங்கள் இவ்வளவு காலம் தேவ்பந்தின் இமாமிற்கு வீணாக சம்பளமும் வழங்கி தங்கள் தொழுகையையும் வீணாக்கி விட்டோமே என்ற மன சஞ்சலம் உண்டானது .அவர்களில் ஒரு மனிதர் தேவ்பந்தின் இளம் மவ்லானாவை அணுகி 'ஒன்று நீங்கள் இந்த புதிய மவ்லானாவிற்கு மறுப்புரை வழங்குகள் அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் ' என்றார் .

இளம் தேவ்பந்தி மவ்லானா மிக பதற்றமடைந்தார் . தமது குறைவான அறிவின் காரணமாக ,புதிய மவ்லானா தம்மிடம் கலாம் ,தஸவ்வுப் பற்றி நீண்ட பயான்கள் மூலம் விளக்கம் அளித்தால் ,  தமது இந்த இமாமத் வேலை போய் விடும் என்று எண்ணினார் .இதையெல்லாம் எண்ணி பயந்தாலும் விவாதத்திற்கு ஒப்புக் கொண்டார் .

விவாதத்திற்கான இடம் ,நாள் ,நேரம் குறிக்கப்பட்டது . குறிப்பிட்ட நாளில் புதிய மவ்லானா கம்பீரமாக தலைப்பாகை அணிந்தவராக எண்ணற்ற நூற்களுடனும் ,தமது ஆதரவாளர்களுடனும் வந்தார் . ஆனால் இந்த பாவப்பட்ட தேவ்பந்தி மவ்லனாவோ  சோர்வான முகத்துடன் ,நடுங்கிய குரலில் ,மிகவும் பயத்துடன் அல்லாஹ் அல்லாஹ் என்றவாறு வந்தார் .

அந்த இளம் தேவ்பந்தி மவ்லானா , விவாதம் ஆரம்பமாகும் முன் ,முன்பின் அறியாத ஒரு நபர் அவர் அருகில் வந்து அமர்ந்து ,'ஆம் ,உரையைத் துவக்குங்கள் .பயப்படத் தேவையில்லை ' என்றார் . இந்த உத்தரவாதம் வந்தவுடன் தேவ்பந்தி மவ்லவி சற்று ஆறுதலும் ,மன வலிமையையும் பெற்றார் .

இளம் தேவ்பந்தி மவ்லானா அதன் பின் நாவில் இருந்து வந்த சொற்கள் என்னவென்றே தாம் அறியவில்லை என்கிறார் . ஆரம்பத்தில் புதிய மவுலானா சில பதில் அளிக்க முற்பட்டாலும் ,இளம் தேவ்பந்தி மவ்லானா அவரைப் பார்த்த பொழுது ,அந்த புதிய மவ்லானா எழுந்து நின்று அவர் காலடியில் தலையை வைத்து ,தலைப்பாகை சிதறி ,'நீங்கள் இவ்வளவு பெரிய மேதை என்று அறியாமல் பொய் விட்டது . அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள் .நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை .நான் தவறான வழியில் இருந்தேன் ' என்று அழுது புலம்பினார் .

அங்கு நடைபெற்ற அந்த காட்சி விவாதம் ஆரம்பிக்கும் முன் நடந்தவற்றிக்கு முற்றிலும் நேர்மாறானது . இளம் தேவ்பந்தி உலமா தமக்கு உதவ வந்த நபர் அதன்பின் காணாமல் மறைந்து விட்டார் என்கிறார் ."

[நூல் - ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 330-331 ]   

இந்த கதையை விவரித்த பின் மவ்லானா முனாஸிர் அஹ்ஸன் கீலானி அந்த திடீர் நபர் பற்றிய பரம இரகசியத்தை உடைக்கிறார் .அவர் வேறு யாருமல்ல மண்ணோடு மண்ணாக மரணித்து மக்கிப் போன தேவ்பந்தின் ஸ்தாபகர் மவ்லவி காஸிம் நாணோத்வி .

மேற்கூறிய சம்பவத்தின் ஆய்வு :-

     முதலாவதாக , தேவ்பந்தியாக்கள் எத்துணை முழுமனதுடன் மவ்லவி காஸிம் நாணோத்வியின் இல்முல் கைப் (மறைவான ஞானம் ) பற்றி ஒப்புக்கொள்கின்றனர் என்பதைப் பாருங்கள் . எந்தளவுக்கு என்றால் குறிப்பிட்ட இளம் தேவ்பந்தி மவ்லானா தடுமாறுகிறார் ,அவருக்கு இந்த இடத்தில், இன்ன நேரத்தில் உதவி தேவைப்படுகின்றது என்ற அளவுக்கு  மறைவான ஞானம் . உடன் காஸிம் நாணோத்வி அவரை நோக்கி ஓடோடி உதவ செல்கின்றார் .

இரண்டாவதாக , காஸிம் நாணோத்வி தனது கபூரை விட்டு வெளியேறவும் ,விரும்பும் இடத்திற்கு செல்லவும் முடியும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .

மூன்றாவதாக , தேவ்பந்தி உலமாக்கள் தமது மரணத்திற்குப் பின் வந்து தமது ஆதரவாளர்களுக்கு உதவ இயலும் ,எனினும் நபிமார்கள் மற்றும் வலிமார்களை பொறுத்த மட்டில் அவ்வாறு ஒப்புக்கொள்ள இயலாது .

இந்த சம்பவத்தை விவரித்த பின் மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானிக்கு திடீரென வந்த ஞானோதயம் ,தேவ்பந்தியாக்களின் வஹாபிய கொள்கைப் படி ,இவ்வாறான நம்பிக்கையை ஏற்றுக் கொள்வது கிடையாது . மாறாக இத்தகைய கொள்கையை 'முஷ்ரிக்கான கொள்கை ' என்று கூறித்தான் பழக்கம் . ஆக இந்த கதையை எவ்வாறு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜோடிப்பது ? என்பதுதான் .

எனவே இத்தகைய கற்பனைக் கதையை தன்னிடம் கூறிய மவுலானா மஹ்முதுல் ஹசனின் கூற்றை ஒதுக்கித் தள்ளாமல் , தமது முன்னோடியின் அற்புத சக்தியை நிரூபணம் செய்ய தமது தேவ்பந்தி கொள்கையை  குழி தோண்டி புதைத்து விட்டார் .

இஸ்லாமிய பல்வேறு பிரிவுகளின் வரலாற்றையும் ஆராய்வோமானால் ,தேவ்பந்திகளைப் போல் தமது கொள்கையையே காவு  கொடுத்த ஒரு வெட்கம் கேட்ட பிர்கா இருக்காது . இந்த அற்புத சம்பவத்தை கூறிய பின்னர் மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானி  அதற்கு ஒரு விளக்கவுரையும் எழுதியுள்ளார் . உங்களில் ஒரு சிலர் அதை படித்து அதிர்ச்சியும் அடையக் கூடும் !

விளக்கவுரை மொழிபெயர்ப்பு :

            மரணித்த நல் அடியார்களின் ரூஹ் மூலம் உதவி உதவி தேடுதல் (இம்தாத் ) விஷயமாக தேவ்பந்தின் உலமாக்களுடைய நம்பிக்கையானது ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கை போன்றதே . இன்னும் ,அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் வானவர்கள் மனிதர்களுக்கு உதவுவதாகக் கூறியுள்ளான் . பல ஸஹீஹ் ஹதீதுகளில் மிஃராஜ் சம்பவம் குறித்த  அறிவிப்புகளில் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு ஹழ்ரத் மூஸா عَلَيْهَا ٱلسَّلامُ அவர்கள் தொழுகையின் எண்ணிக்கை குறித்த விஷயங்களில் உதவியதாகவும் ,   நாயகம்  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் ஏனைய நபிமார்கள் பலரை சந்தித்ததாகவும்  , நன்மாராயம் பெற்றதாகவும் உள்ளது . எனவே இத்தகைய புண்ணிய ஆத்மாக்கள் அல்லாஹ்வால்  துயரில் இருக்கும் முஸ்லிகளுக்கு உதவ  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதென்றால் ,இதனை குரானின் எந்த ஆயத் அல்லது ஹதீத் மறுக்கின்றது ?

[நூல்-  ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 332,சிவப்பு அடிக்கோடு ]

ஸுப்ஹானல்லாஹ் ! இது தானே சத்தியம் ! மரணித்த நல்லடியார்களின் ஆன்மாவைக் கொண்டு உதவி தேடுதல் சம்பந்தமாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் எத்தகைய கேள்விகளைக் கேட்டோமோ ,அதையே தேவ்பந்தியாக்கள் தங்களை நோக்கிக் கேட்கின்றனர் . இதை குப்ர் ,ஷிர்க் என்று இவ்வளவு காலம் பிதற்றி வந்த தேவ்பந்தியாக்கள் பதில் அளிக்க வேண்டும் . இந்த விளக்கவுரையில்      மவ்லானா  முனாஸிர் அஹ்ஸன் கீலானி இது தான்   அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை என்று ஒப்புக் கொள்கிறார் .

ஆனால் அந்தோ பரிதாபம்  மவ்லானா முனாஸிர் ,தமது முன்னோடி அஷ்ரப் அலி தான்வி ,தமது நூல் ஹிப்ளுள் ஈமான் ,பக்கம் 7ல் “பெருமானார் முஹம்மது صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட மறைவான ஞானம் விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ளது போன்றே மேலும் அதற்கு சமமானதே “  என்று எழுதியுள்ளதை மறந்து விட்டார் .

இன்னும் மவ்லவி ரஷீத் அஹ்மத் "எவரொருவர் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு மறைவான ஞானம் அளிக்கப்பட்டது என்று கூறுவாரோ அவர் முஷ்ரிக் " என்று பத்வா வழங்கியதையும் மறந்து விட்டார் .

இனி அந்த கதைக்கு வருவோம் .

தொடர்ந்து அளிக்கும் விளக்கத்தில் ,

" இன்னும் தெளிவான உண்மை என்னவென்றால் , உலகில் எந்த வகையிலும் உதவி பெறும் ஒரு மனிதன் , அல்லாஹுதாலா தான் இந்த உதவியை தனது படைப்புகள்  மூலம் அளிக்கின்றான் . உதாரணமாக வெளிச்சம் அளிக்கும் சூரியன் , பால் வழங்கும் பசு ,எருது போன்றவை . இது தான் சத்தியமான விளக்கம் ,இதை எவ்வாறு ஒருவர் மறுக்க இயலும் ? " 

இன்னும் தமது இறுதியான விளக்கம் அளிக்கும் நோக்கில் ,மவ்லானா முனாஸிர் எழுதுகிறார் ,


"நாங்கள் இறந்த நல்லடியார்களின் ஆன்மாக்களிடத்தில் உதவி தேடுவதை மறுப்பவர்கள் அல்ல " 

உர்து : புசுற்கோ கீ அர்வாஹ் சே மதத் லேனே கே ஹம் முன்கிர் நஹீ ஹைன் 

[நூல்- ஸவானெஹ் காஸிமி ,பாகம் 1, பக்கம் 332,பச்சை அடிக்கோடு ]

மவ்லானா முனாஸிர் அஹ்மத் தமது முன்னோடி கலீல் அஹ்மத் அம்பேட்வி எழுதிய 'பராஹீனே காத்தியா ' நூலை தமது ஆயுளில் படித்ததே இல்லை போலும் . அதில் கலீல் அஹ்மத் " மலக்குல் மவ்த்தும் ,ஷைத்தானுக்கு உள்ள இல்முல் கைப் குர்ஆன் ,ஹதீத் கொண்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது ,  எனினும் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு அவ்விதமான ஆதாரங்கள் இல்லை என்றும் ,யாராகிலும் நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ   அவர்களுக்கு இல்முல் கைப் உண்டென்று நம்பினால் அவன் ஷிர்க்கில் உள்ளான் " என்று கூறியுள்ளதை பார்க்க வில்லை போலும் . 

உங்கள் கண்களுக்கு புலனாகின்றதா ? மவ்லவி காஸிம் நாணோத்வியின் அமானுஷ்ய சக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படும் பொழுது ,குர்ஆன் ஹதீத் உடைய எல்லா ஆதாரங்களும் கொண்டு வரப்படுகின்றது .  காசிம் நாணோத்வி மனித அற்புதர் என்று நிரூபணம் செய்ய , எல்லாவிதமான தர்க்கங்களும் ,உதாரணங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன , மவ்லவி காசிம் நாணோத்வியின் உயர் அந்தஸ்தை நிரூபிக்க !

ஆனால் ,கைசேதம் ! படைப்பினங்களில் சிறந்த ,அல்லாஹ்வின் ஹபீப் , கத்மே நுபுவ்வத் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்
صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் நிந்தனை செய்யப்படும் பொழுது இவர்கள் ஒருவரும் முன்வரவில்லை !


உங்களின் முன்னோடிகள் தொழுகையில் பெருமானார் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் நினைவு வருவது எருமை  ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விட மோசமானது என்று எழுதிய போது எங்கே போனது குர்ஆனு,ஹதீத் உடைய  இந்த வசனங்கள் ,உதாரணங்கள் ???

உங்களுடைய முன்னோடிகள் கண்மணி நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் இல்முல் கைபை விலங்கினங்களுக்கும் , பைத்தியக்காரர்களுக்கும் ஒப்பிட்ட பொழுது எங்கே சென்றது மிஹ்ராஜ் உடைய ஹதீத் ??? 

அப்பொழுது ஏன் உங்களில் ஒருவரும் 
நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களின் இல்முல் கைப் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டது , அல்லாஹ் தனது ஹபீப் முஸ்தபா  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு தனது நாட்டத்தினால் மறைவான ஞானங்களை அளிக்கிறான் என்று ஏன் கூறவில்லை ???

இதன் பதில் வெட்ட வெளிச்சமானது . நாம் யாரை நேசிக்கின்றோமோ  ,எதை உண்மை என்று நம்புகின்றோமோ அதற்கு ஆதரவளிப்போம் . மவ்லவி காசிம் நாணோத்வியின் அந்தஸ்து கேள்விக்குறி ஆகும் பொழுது , காசிம் நாணோத்வி தனது மண்ணறையில் இருந்து வெளிவந்து ,நடந்து ,தமது விருப்பத்தின் பேரில் அமர்ந்து எல்லாம் எப்படி ? என்ற கேள்வி எழும் போது "அல்லாஹ் தான் நாடிய ஆன்மாக்களுக்கு பிறருக்கு உதவும் ஆற்றல் அளித்தான் " என்று சொல்லப்பட்டது . 

தமது மாணவர் கஷ்டத்தில் இருப்பது கபூரில் இருக்கும் காசிம் நாணோத்விக்கு எவ்வாறு தெரியும் என்பதற்கு "அல்லாஹ் இந்த ஞானத்தை வழங்கினான் " என்று சொல்லப்பட்டது .


ஆனால் மனவருத்தம் அளிக்கும் விடயம் என்னவென்றால் , சிலர் கண்மணி நாயகம் صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களை நிந்தனை செய்த ,செய்கின்றவர்களை மறுப்பதே இல்லை . எந்த தேவ்பந்தி தப்லீகியிடமும் என்று நாயகம்   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா ? என்று கேளுங்கள் , உங்களிடம் வழங்கப்படும் பதில் ' நாயகம்   صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் படைப்பினங்களிலேயே அதிக ஞானம் வழங்கப்பட்டவர்கள் ' என்று .
கண்மணி நாயகம்  صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள்  அல்லாஹ்வினால் மறைவான ஞானம் வழங்கப்படடவர்கள் என்ற பதில் வராது .

அவர்கள் இன்று வரை இல்முல் கைப் விடயமாக குர்ஆனின் தெளிவான விளக்கங்களை ஏற்பதில்லை  ,  ஆனால் , 'அல்லாஹ் காசிம் நானோத்வியிடம் ,நீர் இந்த கிராமத்திற்குச் சென்று உங்களது மாணவருக்கு உதவுங்கள் ' என்று கூறப்பட்டுள்ளதை மனமுவந்து ஏற்பார்கள் .

தேவ்பந்தி தப்லீகி வஹாபிகளின் முத்த முதல் முன்னோடி இஸ்மாயில் திஹ்லெவி தனது நூல் 'தக்வியத்துள் ஈமானில் ' எழுதியுள்ளதை இங்கு எடுத்துக் காட்டுவது சாலத் தகும் .

  கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் “
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]   

தேவ்பந்தி தப்லீகி வஹாபிகள் இனி இஸ்மாயில் திஹ்லவியின் நம்பிக்கை தவறென்று அதிகாரப்பூர்வமாக சொல்ல வேண்டும் ,இல்லை என்றால் காசிம் நாணோத்வியின் சம்பவம் ஷிர்க் என்று தீர்ப்பளிக்க வேண்டும் ! உண்மையை உரைப்பார்களா அல்லது வழக்கம் போல் தங்களது முனாபிக் தனத்தை வெளிக்காட்டுவார்களா ???

   



















Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment